
நான் மூடிவைத்த புத்தகம்
என்னோடு பேசிக் கொண்டிருந்தது,
அதன் கையொன்று
என் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறது...
காலங்களை நகர்த்திவிட்டு நுழைந்த அதன் வாசல்
கி.மு விற்கு முன் கட்டப் பட்டதாக இருக்கலாம்,
தொன்மைக்குள் இயைந்து கொள்கிறேன்,
அஃதொரு வேட்டையுலகம்...
கனிகளும்,விலங்குகளின் கறிகளும் மட்டுமே
உணவாய் விழுங்குகிறேன்...
என் தோள் பட்டைக் காயங்களிலவள்
தன் எச்சிலால் மருந்துப் பூசுகிறாள்,
அவளை மட்டும் நான்
புத்தகத்திலெங்கும் வாசிக்கவேயில்லை...
தேனடையெடுக்க நானும் அவளும் மட்டுமே
குத்தீட்டிக் குச்சிகளோடு போகிறோம்,
ஈ கடிக்காமல் தேனெடுப்பதில்
அவள் எப்பவுமே மிகுந்த கெட்டிக்காரி...
வியர்வைக்குள் வியர்வையை இழைத்து
புது வாசம் செய்கிறோம்...
காடு மணக்கிறது....
சின்ன மழையின் சிலிர்த்த சாரலில்
சிக்கிக் கொள்கிறோம்...
புரண்டுவந்த கலுழியின் பொருண்மையை
ஓடையொன்று உள்வாங்கிக் கொள்கிறது...
நிதானித்த மௌன நித்திரையில்
நிழல் கழன்று வெளியேறுகிறேன்...
புத்தகம் என்னருகில், இப்போது
புதுக் கதையொன்றை எழுதிக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment