பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்

பழுத்த பருத்தி இலைகள்
மட மடத்து உதிர்கின்றன
உலர்ந்த சருகுகளின் குவியல்
காற்றின் ஞாபகங்களில்
விலகி விலகி அசைகின்றது
வெடித்த பருத்திக் காய்களிலிருந்து
பிரிந்த பஞ்சுகள்
வேனிற்காலப் பொழுதொன்றைத் தூக்கிப்பறக்கின்றன
பச்சை இலைகளின் மணம்
இயற்கையை நடனமாடும்
பரவசத்தின் குரலென சிணுக்கமிடும்
தீப்பொறிகளென உதிர்ந்திடும் இலைகள்
காற்றைத் தீண்டும் பொழுது
மறுபடியும் குருத்துவிடும் உதடுகள்
அதிகாலைக் குளிரின் காமம்
மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா
பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
துடிக்கின்றது சூரியன்
ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை
மூன்று காலங்களிலும்
தங்கிவிடுகின்றது
பருத்திக் காய்கள் வெடிக்கும் நாளொன்றில்
கண்களில் காடென வளரும்
பசிகொண்டவளுக்காக
விரைந்து வித்துக்களை உதிர்க்கின்ற
பஞ்சுகள்
காற்று வெளியெல்லாம் பரப்புகின்றன
அவன் வருகையின்
விநோதமான சமிக்ஞைகளை
கவிதாயினி அனார் இஸ்ஸத் ரெஹானா
No comments:
Post a Comment