Tuesday, 1 August 2017

எங்களால் முடிந்தது

Image may contain: one or more people

கனவுகளை விரித்துப் படுக்க 
பழகிக் கொண்டோம், 
எங்களின் காடுகள் 
சப்தமிட்டுக் கொண்டே அலைகின்றன, 
உறக்கமில்லாத இரவுகளை 
சிலுவைக் கனவுகள் சுமந்து செல்கின்றன, 
தாயம் போடாத ஆட்டக்காரர்கள் 
எங்களை நகர்த்துகிறார்கள்... 
எங்களின் சன்னல் கதவுகளை 
திறந்து விடாதீர்கள் 
வெளிச்சத்திற்குக் கண்கள் பழகவில்லை, 
எங்களின் கவிதைத் தாள்கள் 
கசங்கியே கிடக்கின்றன... 
எழுது பொருளில் 
வறுமை உட்கார்ந்திருக்கிறது, 
நாங்களெதற்கும் அழுவதில்லை 
கண்ணீரையும் விற்பனைச் செய்ய 
ஒப்பந்தங்கள் போட படும்... 
எங்கள் செல்பேசிகளில் 
ஆங்க்ரி பேர்டுகளைக் கொண்டு 
எதிரிகளைக் கொன்று குவிக்கிறோம்... 
ஆம் 
எதிரிகளைக் கொன்று குவிக்கிறோம், 
ஆம் எப்போதும் அது மட்டும்தான் 
எங்களால் செய்ய முடிகின்றது, 
ஆனால் அவர்களோ 
ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், 
நாங்கள் 
எங்களைத்தான் இழந்து கொண்டிருக்கிறோம்.

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts